தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தனக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா உயர் நீதிமன்றத்தில் வழக்கு

By

Published : Feb 26, 2021, 10:25 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சூரப்பா நியமிக்கப்பட்டார். அவருக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அரசு ஆணையம் அமைத்து 2020ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரியும் துணைவேந்தர் சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பெற்ற படிப்புகளை மனுவில் பட்டியலிட்டுள்ள அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், தனக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் விசாரணை ஆணையத்தை அமைத்து உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்தும் வகையில், சீர்மிகு உயர் கல்வி நிறுவனமாக அறிவிக்க எடுத்த முயற்சிக்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளுங்கட்சிக்கு அடி பணிய மறுத்ததால் தன்னை பழி வாங்கும் நோக்கிலும், நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டம், ஆதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த ஊழல் புகார், 262 நாள்களுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு அண்ணா பல்கலைக்கழக அதிகாரி சென்ற போது, அந்தப் பெயரில் அங்கு எவருமில்லை என்பது தெரிய வந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி, புகார்கள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க சில நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். அந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து, ஆளுநரின் ஆலோசனைகள் பெறப்படவில்லை. துணைவேந்தர் பணிகளை செய்ய விடாமல் தடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனக்கு எதிரான புகார்களுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை என மனுவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு நாளை (பிப்.27) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆசிரியா் தோ்வு வாரியத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details