சென்னை: எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட முதுகலைப் படிப்புகளுக்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு CEETA-PG (Common Engineering Entrance Test and Admission) என்ற தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகள் கலை அறிவியல் பாடப்பிரிவின்கீழ் வருவதால் அவற்றிற்கு தனியாக நுழைவுத்தேர்வும், முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கு தனியாக நுழைவுத்தேர்வும் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடையும். அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி, தனியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க, செப்டம்பர் மாதம் வரை ஆகிறது. இந்த காலதாமதத்தால் முதுகலை பொறியியல் படிப்புகளில் ஏராளமான காலியிடங்கள் ஏற்படுகின்றன.