அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தினை பெற்று செயல்படும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆகிய பணியில் உள்ளவர்கள் போலியான முனைவர் பட்டச் சான்றிதழை அளித்து பணியில் சேர்ந்துள்ளதாகப் புகார்கள் வந்தன. அதனைத் தொடரந்து அண்ணா பல்கலைக்கழகம் சிலரின் முனைவர் சான்றிதழ்களை ஆய்வுசெய்தபோது அவை போலியானவை எனக் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளிலும் பணிபுரியும் பேராசிரியா்களின் முனைவர் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வுசெய்வதுடன், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து உண்மைத்தன்மை சான்றை பெற்று மாா்ச் 16ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனப் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் கருணாமூர்த்தி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
2020-21ஆம் கல்வியாண்டு இணைப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்கான விவரங்களைப் பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் பதிவேற்றம் செய்துவரும் நிலையில், சில பேராசிரியா்களின் ஆதார், வருமான வரி நிரந்தர கணக்கு எண் விவரங்கள் தவறானதாக உள்ளன. எனவே, இந்த விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக அசல் ஆவணங்களுடன் சரிபாா்த்த பின்னரே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், வெவ்வேறு பல்கலைக்கழகங்களிடமிருந்து முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கும் சில பேராசிரியா்கள், இரண்டுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. மேலும், சிலா் போலி முனைவர் பட்டங்களைச் சமா்ப்பித்து பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.