சென்னை:மிக்ஜாம் (michaung) புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரி மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நவம்பர் - டிசம்பர் பருவ தேர்வு கால அட்டவணை மாற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டிசம்பர் 11ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது என அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இன்றும், நாளையும் (7,8 ஆகிய தேதிகள்) நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணமாக, பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் அறிவித்திருந்தார். மேலும், தள்ளி வைக்கப்படும் தேர்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.