தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணைவேந்தர் சூரப்பா நல்லவரா, கெட்டவரா? - விசாரணையில் தெரியும் - retired justice kalaiarasan

துணைவேந்தர் சூரப்பா ஊழல்வாதியா என்பது விசாரணையில் தெரியும் என்று தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

anna_university
anna_university

By

Published : Jan 6, 2021, 4:13 PM IST

Updated : Jan 6, 2021, 9:29 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஊழல் செய்யவில்லை எனக் கூறுபவர்களுக்கு விசாரணைக் குழுவின் முடிவில் உண்மை தெரியவரும் எனத் தனியார் பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர் கூட்டமைப்புத் தலைவர் எம்.கே. கார்த்திக் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா 280 கோடிக்கு மேல் முறைகேடு செய்துள்ளதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. அதனை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை அலுவலராக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, துணைவேந்தர் மீது முறைகேடு புகார் அளித்தவர்களை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

இதனடிப்படையில், தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் கார்த்திக்கிடம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது அளித்த புகார்கள் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான அலுவலர்கள் குழு விசாரணை மேற்கொண்டது.

விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து எனது தரப்பில் இருந்த ஆதாரங்களை அளித்து வாக்குமூலம் தந்துள்ளேன். விசாரணை ஆணையத்தில் நான்கு தலைப்பில் புகார்களை அளித்துள்ளேன்.

விசாரணை அலுவலர் அலுவலகம்

சூரப்பா பதவியேற்று மூன்று ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதேபோல் இவர் காலத்தில் ஆசிரியர்களின் தற்கொலையும் நடைபெற்றுள்ளது. சூரப்பா நேர்மையானவர் எனக் கூறுகின்றனர். அவர் எந்தளவு நேர்மையானவர் என்பது குறித்து விரைவில் தெரியும்.

பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களில் அரியர் வைத்துள்ளவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலித்துவிட்டனர். ஆனால், அவர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை. சூரப்பாவின் செயலால் மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 23 லட்சம் அரியர் மாணவர்கள் உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண வசூலில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை செய்துவருகின்றனர்" என்றார்.

விசாரணைக்குப் பின்னர் குழுவின் அலுவலர் ஒருவர் கூறும்போது, "அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை முழுமையாக ஒப்படைக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து ஆவணங்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டுவருகிறோம்.

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவர் கார்த்திக்

விசாரணையில் துணைவேந்தர் சூரப்பா பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. பொங்கலுக்குப் பின்னர் அண்ணா பல்கலைக்கழக அலுவலர்கள் அழைத்து விசாரணை நடத்த உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முக்கிய ஆவணங்களை தர அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு: குற்றஞ்சாட்டிய விசாரணை அலுவலர்

Last Updated : Jan 6, 2021, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details