சென்னை:கடந்தாண்டு இறுதியில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில்நுட்ப படிப்பில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திலும் மத்திய அரசு உதவியுடன் நடத்தப்படும் எம்டெக் உயிர் தொழில்நுட்பவியல் படிப்பில், இந்த இட ஒதுக்கீடு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் எம்டெக் உயிர்தொழில்நுட்பவியல் படிப்பில் மத்திய அரசின் 49.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தது.
இதனால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதுகலை உயிர் தொழில்நுட்பவியல் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இட ஒதுக்கீடு அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல் இதனைத் தொடர்ந்து தற்போது மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் எம்டெக் உயிர்தொழில்நுட்பவியல் படிப்பில் பொருளாதரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக்கழகத்திலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.