அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்குவது குறித்து ஆய்வுசெய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு சிறப்புத் தகுதி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதை ஏற்பதா, வேண்டாமா என தமிழ்நாடு அரசு முடிவு செய்யாத நிலையில், இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம் ஜெயக்குமார் ஆகிய ஐந்து அமைச்சர்கள், உயர் கல்வித் துறை செயலர், சட்டத் துறை செயலர், நிதித் துறை செயலர் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனமாக இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், மாநிலச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மாநில பொதுப் பல்கலைக்கழகமாக இருந்துவருவதன் காரணத்தால், ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனம் என்ற தகுதி நிலையை அடைந்த பின்னரும்கூட, தொடர்ந்து மாநிலச் சட்டத்தின் கீழ் இயங்கும்.