சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று, நாளையும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. மேலும், புயல் இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில், தொடர்ந்து கன மழையானது பெய்து வருகிறது.
இந்த மிக்ஜாம் புயல் நாளை (டிச.5) நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தால் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் இன்றும், நாளையும் ஒத்திவைக்கப்படுகிறது என அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் அறிவித்தார். இதன் புதிய கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.