தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக் கழக ஆன்லைன் இறுதிப் பருவத் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம்? - அண்ணா பல்கலைக் கழகம் ஆன்லைன் இறுதிப் பருவத் தேர்வு

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆன்லைன் இறுதிப் பருவத் தேர்வில் மாணவர்கள் படுத்துக்கொண்டும், தேநீர் கடையில் அமர்ந்து கொண்டும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

anna university online exam forgery
அண்ணா பல்கலைக் கழக ஆன்லைன் இறுதிப் பருவத் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம்?

By

Published : Oct 2, 2020, 1:59 PM IST

Updated : Oct 2, 2020, 5:06 PM IST

இறுதிப் பருவ ஆன்லைன் தேர்வில், 94 விழுக்காடு மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளதாகவும் 6 விழுக்காடு மாணவர்கள் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு எழுதாமல் இருந்ததாகவும் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த இறுதிப் பருவத் தேர்வினை அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உட்பட ஒரு லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் எழுதுவதற்கு விண்ணப்பித்தனர். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணிநேரம் விடையெழுத அனுமதிக்கப்பட்டது. 40 வினாக்களுக்கு நடைபெற்ற தேர்வில் 30 வினாக்களுக்குப் பதிலளிக்கவேண்டும்.

இறுதிப் பருவத் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தேர்வு எழுதும் பாடத்தாள்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாணவருக்கும் மாறுபடும். அதனடிப்படையில், 1 லட்சத்து 15ஆயிரம் மாணவர்கள் 4 லட்சத்து 19ஆயிரத்து 214 தேர்வினை ஆன்லைன் மூலம் எழுத வேண்டும். அதில், 3 லட்சத்து 91ஆயிரத்து 397 தேர்வினை மாணவர்கள் எழுதியுள்ளனர். 17ஆயிரத்து 261 மாணவர்கள் தேர்வினை எழுதவில்லை.

தொழில் நுட்பக் கோளாறுகளால் 10 ஆயிரத்து 574 தேர்வுத்தாள்களை மாணவர்கள் எழுதவில்லை. தேர்விற்கு வராத மாணவர்களுக்கும், தொழில் நுட்பக் கோளாறு காரணமாக எழுத முடியாத மாணவர்களுக்கும் அரசின் அனுமதிபெற்று தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

மாணவர்களின் விவரங்கள், புகைப்படம், செல்போன் எண், இமெயில் ஐடி, அவர்களுக்கான தனிப்பட்ட தேர்வு எழுதுவதற்கான இணையதளத்தில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் படிக்கும் கல்லூரியின் ஆசிரியர்கள் 18,000 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வினை மாணவர்கள் தான் எழுதுகின்றனரா? என்பதை மேற்பார்வைச் செய்தனர்.

அப்போது, பல மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதில், ஆள்மாறாட்டம் போன்றவையும் நடந்துள்ளது. தேர்வு எழுதும்போது மாணவர் ஒருவர் படுத்துக்கொண்டு வேறு ஒருவரிடம் கேட்டு எழுதுவதும், தேநீர் கடையில் நண்பர்களுடன் அமர்ந்தும், மாணவி ஒருவர் கணினி அருகில் இருவரை நிறுத்திக்கொண்டு சந்தேகம் கேட்டு எழுதியதும் தேர்வுத்துறை அலுவலர்களால் கண்டறியப்பட்டது.

இதில், வேறு மாணவருக்காக ஆள்மாறாட்டம் செய்து எழுதிய மாணவர், தான் ஆள்மாறாட்டம் செய்வதை கண்டுபிடித்துவிடுவார்கள் என பேசியதுதான் உட்சபட்ச கொடுமை. இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை தேர்வுத்துறை அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை இறுதி செய்தபின்னர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என நம்பத்தகுந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்விற்கான விதிமுறைகளில், ஆன்லைன் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்தில் தேவையற்ற சத்தம் எழுந்தாலும் மாணவர்களின் தேர்வு செல்லாது எனவும்; ஆன்லைன் தேர்வுக்கான மின்னனு சாதனங்களுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பே மாணவர்கள் கணினி முன்னர் அமரவேண்டும். 1 மணி நேரம் நடக்கும் தேர்வின்போது மாணவர்கள் மாஸ்க் அணியக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேர்வு எழுதும் மேஜை மீது எவ்விதப் பொருட்களும் இருக்கக்கூடாது எனவும்; கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இறுதிப் பருவத் தேர்வு மதிப்பெண்கள் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது. எழுத்துத்தேர்வுக்கு 50 மதிப்பெண்களும் அகமதிப்பீட்டிற்கு 20 மதிப்பெண்களும், முந்தையப் பருவத் தேர்விலிருந்து 30 மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்ற எதிர்ப்பு - ஆளுநருக்கு பேராசிரியர்கள் கடிதம்

Last Updated : Oct 2, 2020, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details