சென்னை:இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள சில பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களை தமிழக ஆளுநர் தன்னிச்சையாக அறிவித்திருப்பதை அடுத்து தமிழக ஆளுநருக்கும், அரசுக்கும் இடையில் இன்னொரு முட்டுக்கட்டை உருவாகியிருப்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டமானது.
துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதியை இணைக்க வேண்டும் என்ற நோக்கம் நல்லதும், வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் ஆளுநர் மாளிகை அதை தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் விதிகள் வழிகாட்டுதல்களின்படியே தேடல் குழுக்களை அமைக்க வேண்டும். மேலும், அதை அரசாங்கம் தனது அரசிதழ் (கெஜட்) மூலம் அறிவிக்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழகங்களின் விதிகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களை ஆளுநர் மாளிகை மதிக்க வேண்டும். தேடல் குழுக்களை அமைப்பது தொடர்பாக மரபுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு தனது விருப்பத்தின்படி துணைவேந்தர் தேடல் குழுக்களை அமைப்பதற்கும், அதை ஊடகங்களுக்குச் செய்தியாக வெளியிடுவதற்கும் சிறப்பு அதிகாரமோ, உரிமையோ கிடையாது.
மாறாக, மாநில அரசு அது குறித்த அரசு ஆணையை முறைப்படி வெளியிட்ட பிறகே, தேடல் குழு முறைப்படி செயல்படத் தொடங்கும். ஆளுநரின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு ஏற்கெனவே ஆட்சேபித்து விட்டது. இந்நிலையில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையிலான இந்த முட்டுக்கட்டை துணைவேந்தர் நியமனத்தை நிச்சயமாக மேலும் தாமதமாக்கும். இது பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டை மிக மோசமாக பாதிக்கும். இதன் விளைவாக ஏற்கெனவே மோசமடைந்து வரும் உயர்கல்வித் தரத்தில் மேலும் தாக்கம் ஏற்படும்.
பல்கலைக்கழகங்களின் விதிகளைத் திருத்துக:
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைக் கண்டறியும் தேடல் குழுக்களில், பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று யுஜிசியின் புதிய விதிகளில் நிபந்தனை உள்ளது என்பது உண்மையே. இது அந்தந்த மாநில அல்லது பகுதிகளில் உள்ள பாரபட்சமான அல்லது அரசியல் செல்வாக்கைத் தவிர்க்கும் என்பதால் வரவேற்கத் தக்கதே.