சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவர் பணியில் இருந்த போது, பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
குறிப்பாக அவர் ரூ.248 கோடி ஊழல் செய்ததாகப் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில், சூரப்பாவுக்கு எதிரான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்தக் குழுவானது அண்ணா பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்கள், புகார் அளித்தவர்களிடம் விரிவான விசாரணை நடத்தியது. அப்போது சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகின.
குற்றச்சாட்டுகளுக்குவிளக்கம் கேட்டு நோட்டீஸ்
இந்த நிலையில் மே 3ஆம் தேதி குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு விசாரணைக் குழு சூரப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சூரப்பா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனவும் இதை முற்றிலும் மறுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கரோனா ஊரடங்கைச் சுட்டிக்காட்டி கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என விசாரணை ஆணையம் கோரிக்கை வைத்தது. அதனடிப்படையில் உயர் கல்வித்துறை கூடுதல் கால அவகாசம் வழங்கியது.