சென்னை:அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு 446 கல்லூரியில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 996 இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழுவின் மூலம் சிறப்பு, பொதுக்கலந்தாய்வு,துணைக்கலந்தாய்விற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்கள் அனுமதிக்கபட்டன.
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக.11ஆம் தேதி 1,58,157 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரிவினர், பொதுப்பிரிவினர்,துணைக் கலந்தாய்வு என வரிசையாக நடத்தப்பட்டன. துணைக்கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 1 லட்சத்து 650 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 53 ஆயிரத்து 628 இடங்கள் காலியாக இருக்கின்றன.
பொறியியல் கலந்தாய்வில் 4 வது சுற்று முடிவில் 14 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராமல் இருந்தனர். துணைக் கலந்தாய்வில் 5 கல்லூரிகள் ஒரு மாணவரை மட்டும் சேர்த்துள்ளனர். துணை கலந்தாய்வு முடிந்த பின்னரும் 9 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேராத அவலநிலை உள்ளது. 16 பொறியியல் கல்லூரிகளில் 1 சதவீதம் மாணவர்களும், 28 கல்லூரியில் 5 சதவீதம் மாணவர்களும் சேர்ந்துள்ளனர். 48 கல்லூரியில் 10 சதவீதம் மாணவர்களும், 88 கல்லூரியில் 25 சதவீதம் மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.