சென்னை: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை பொறியியல் படிப்பு என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. பொறியியல் கல்லூரிகளில் இடம் பிடிக்க மாணவர்களிடையே கடும்போட்டி நிலவியது. ஆனால் தற்போது பொறியியல் படிப்பின் மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்து காணப்படுகிறது.
பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் அந்தப் படிப்பின் மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியாரை சேர்த்து மொத்தம் 446 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன.
நடப்புக்கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 378 பொறியியல் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. நான்கு கட்டங்களாக நடந்து முடிந்த கலந்தாய்வில் 93 ஆயிரத்து 571 இடங்கள் மட்டுமே நிரம்பியதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 60 ஆயிரத்து 707 இடங்கள் மாணவர்கள் சேர்க்கையின்றி காலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலந்தாய்வின்போது ஒரு சில கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட நடைபெறாமல் இருந்துள்ளது. அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி குழுமம் ஒவ்வொரு ஆண்டும் 30 விழுக்காடு மாணவர்கள் சேராத பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை குறைத்துவருகிறது.
இந்த நிலையில் நடப்பாண்டு நடத்தப்பட்ட பொறியியல் கலந்தாய்வில் 14 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும்; 36 பொறியியல் கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதுதொடர்பான பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேநேரம் கடந்த கல்வி ஆண்டில் ஒரு மாணவர் சேர்க்கை கூட நடக்காமல் இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 11ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 10 விழுக்காடு இடங்களுக்கு குறைவாக 63 கல்லூரிகளிலும், 110 கல்லூரிகளில் 25 விழுக்காட்டிற்கும் குறைவாகவும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை குறைவால் போதிய ஆசிரியர் நியமனம், தரமான கல்வி அளிப்பதில் தலைகீழ் நிலைமை நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பூஜ்யம் மற்றும் 10-க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட 30 பொறியியல் கல்லூரிகளை மூட கடிதம் எழுத அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளில் மாணவர் எண்ணிக்கையைக் குறைக்கவும், 2023-24ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும் அண்ணா பல்கலைக்கழகம் டிசம்பர் மாதம் ஆலோசனை நடத்த உள்ளது. அந்தக் கூட்டத்தில் மாணவர்கள் இல்லாத கல்லூரிகளை மூடுவதற்கு கடிதம் அனுப்புவது குறித்து முடிவெடுக்க அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி முடிந்தவுடன் கல்லூரிகளை மூடுவதா அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றம் செய்வதா என்பது குறித்தும் அக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அண்ணா பல்கலைக் கழக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ராஜினாமா... ட்விட்டர் அலுவலகம் மூடல்... டிரெண்டாகும் #RIP Twitter