சென்னை:பொறியியல் படிப்பில் சேர்தவதற்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் 200க்கு 199.5 மதிப்பெண் பெற்ற மாணவி வேதலட்சுமி முதலிடத்ததையும், 199 மதிப்பெண்கள் பெற்று ராம் பிரசாத் 2ம் இடத்தையும், 198.5 மதிப்பெண்கள் பெற்று துருவன் 3-ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் சேர விண்ணப்பம் பெற்று, தரவரிசைப் பட்டியல் 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2, 19,346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1,60,783 கலந்தாய்வின் மூலம் நிரப்பட உள்ளது.
சிறப்பு பிரிவினருக்கான விளையாட்டு பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொது பிரிவு கலந்தாய்விற்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 721 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மூன்று சுற்றுக் கலந்தாய்வில் 95 ஆயிரத்து 46 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 80 ஆயிரத்து 951 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12 ஆயிரத்து 59 இடங்கள் அனுமதிக்கப்பட்டது. அவற்றில் 3 சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 11 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில், 8475 பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு துணைக் கலந்தாய்வின் மூலம் மாணவர்களை சேர்ப்பதற்கு, 12 ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பொது, தொழிற்கல்விப் பிரிவில் துணைத்தேர்வில் தகுதிப்பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் செய்யாத மாணவர்களும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 3 ந் தேதி வரையில் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பெற்றனர்.
துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல்:துணை கலந்தாய்வில் சேர்வதற்கு பொதுப்பிரிவிற்கு 13 ஆயிரத்து 650 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் கல்வியியல் பிரிவில் 13 ஆயிரத்து 375 மாணவர்களும், தொழிற்கல்வி பிரிவில் 275 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதி பெற்ற 13 ஆயிரத்து 244 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.