அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும், கடந்த 2018ஆம் ஆண்டு பல்கலைக்கழக பதிவாளர் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து பெற்ற அசல் சான்றிதழ்களை சரிபார்ப்புக்கு பின் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பழனியப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், சான்றிதல் சரிபார்ப்புக்கு பின் அசல் சான்றிதழ்களை ஆசிரியர்களிடம் திரும்ப ஒப்படைத்தால், இடையில் ஆசிரியர்கள் வேறு கல்லூரிக்கு மாறிவிடக்கூடும். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதால் பல்கலைகழகத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் அண்ணா பல்கலைகழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய சுற்றறிக்கை அடிப்படையிலேயே, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பித்ததாக விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
தனியார் கல்வி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவுகளுக்கு எதிரானது. எனவே பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தனியார் பொறியியல் கல்லூரிகள் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் பார்க்க : 600 ஏக்கர் நில அபகரிப்பு விவகாரம் - காசாகிராண்டே முறையீடு தள்ளுபடி!