சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு அல்லாத மற்ற ஆண்டு மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை www.annauniv.edu, www.aucoe.annauniv.edu ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். முந்தைய செமஸ்டர் தேர்வு மதிப்பெண், உள் மதிப்பீடு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்குத் தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.
அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்பு அடுத்த செமஸ்டருடன் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக வழிகாட்டுதலின்படி நடத்தப்படும் எனவும்; தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்திகள் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால், இந்த முறை மாணவர்கள் இணையதளத்திலேயே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.