சென்னை: தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்தர ரெட்டியை அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "திமுக தொழிற்சங்கள் நேற்றுமுந்தினம் மாலை முன்னறிவிப்பு இல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை நாங்கள் கண்டித்தோம். போக்குவரத்து துறை பொதுமக்களுக்கான சேவை பிரிவு, வேலை நிறுத்தம் போராட்டம் என்றால் பொதுமக்களுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.
ஆனால், முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது முறையல்ல, பொது மக்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றால் எப்படி செல்ல முடியும். இதனால் பெண்கள் உட்பட பலர் பாதிப்பிற்கு உள்ளாகினர். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலம் தொடங்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலம் வரையில் தொழிலாளர்கள் நலன் கருதி செயல்பட்டார்கள்.
கரோனோ பேரிடர் காலத்திலும், தொழிலாளர்களை காத்தவர் எடப்பாடி பழனிசாமி. அந்த வழியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக அண்ணா தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று முந்தினம் திடீர் என அறிவித்த வேலை நிறுத்தம் குறித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் பொது மக்களுக்கு எந்தவொரு இடையூறும் வராமல் தொழிலாளர்களுக்கான பாதிப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.