சென்னை: 'புதுமைப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுரடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 8 தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இந்நூலகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடனும்", யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் 6.2 இலட்சம் நூல்கள் உள்ளன.
இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. தரைத் தளத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி பிரிவு, முதல் தளத்தில் சொந்த நூல்கள் படிப்பதற்கான பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான பிரிவு, இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, மூன்றாவது தளத்தில் கணிணி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், உளவியல், சமூகவியல், தத்துவவியல், அறவியல், அரசியல் அறிவியல் தொடர்பான நூல்களும்,
நான்காவது தளத்தில் பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல் மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்களும், ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல், கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்களும், ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, நிர்வாக மேலாண்மை, நுண்கலை மற்றும் விளையாட்டுத் தொடர்பான நூல்களும்,
ஏழாவது தளத்தில் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், வரலாறு, புவியியல், சுற்றுலா, வாழ்க்கை வரலாறு, மின்-நூலகம் ஆகியவையும், எட்டாம் தளத்தில் நிர்வாகப்பிரிவு மற்றும் அரிய புத்தகங்கள் பிரிவும் உள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்துச் சென்று, முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில் குழந்தைகளுக்கான நிகழ்வாக வேலு சரவணன் வழங்கிய “கடல் பூதம்” நிகழ்ச்சியைப் பார்வையிட்டார்.