சென்னை: அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி உருவாக்கி புதிய வலைத்தளத்தை தலைமைச் செயலாளர் இறையன்பு துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு நேர்முகப் பயிற்சிகளை அளித்து வருகிறது.
இதுவரை காகிதத்தில் நிரப்பப்பட்டு வந்த படிவங்களை இணைய வழிக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கிலும், கல்லூரியைப் பற்றிய விவரங்களைப் பொது மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி புதியதாக aasc.tn.gov.in என்ற பெயரில் வலைத்தளம் ஒன்றினை உருவாக்கி உள்ளது.
Web portal எனப்படும் இந்த வலைத்தளத்தில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட உள்ள பயிற்சி குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். பயிற்சி பெறுவோரின் பட்டியலைத் தயாரித்தல், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடல், பயிற்சியாளர்களின் பின்னூட்டம் பெறுதல், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை அளித்தல் என்று இதுவரை காகிதங்களில் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்தும் இனி இணைய வழியில் செயல்படுத்தப்படும். இதன் காரணமாக கால விரயம் தவிர்க்கப்படுவது உடன் அனைத்து விவரங்களும் எப்போதும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியுடன் இணையதளத்தில் பாதுகாப்பாக இருக்கும்.
இதையும் படிங்க: உயர்நீதிமன்றத்தில் முதல்முறையாக தெலுங்கு மொழியில் தீர்ப்பு - கேரளாவை தொடர்ந்து தெலங்கானாவிலும் அமல் !
மேலும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி குறித்த அனைத்து விவரங்களும் இந்த வலைத்தளத்தில் கிடைக்கும். அளிக்கப்படும் பயிற்சிகளின் வகைகள், ஆண்டு முழுவதும் பயிற்சிகள் நடைபெறும் நாட்கள், வகுப்பறைகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், தங்கும் விடுதிகள், கூட்ட அரங்கம், நூலகம், மண்டலப் பயிற்சி மையங்கள் போன்ற அனைத்துச் செய்திகளும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் .
இந்த புதிய வலைத்தள பக்கத்தை தலைமைச் செயலாளரும் , அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குனருமான இறையன்பு துவக்கி வைத்து உள்ளார்.
சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் 6 ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளும், 15 புதிய விடுதி அறைகளும் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பயிற்சியாளர்களின் வசதிக்காக தற்போது உள்ள முதன்மைக் கட்டிடத்தை ஒட்டி உள்ள பகுதியில், 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளும், குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளும் அடங்கிய இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த புதிய வகுப்பறைகளையும், புதிய கட்டடங்களையும், முதலமைச்சர் ஸ்டாலின், சமீபத்தில் திறந்து வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Etv Bharat Exclusive: வனம் தின்னும் பிளாஸ்டிக்.. குப்பை மேட்டில் மேயும் வனஉயிர்கள் - என்ன நடக்கிறது கோவையில்?