"இலக்கியம் என்னுடைய பிரச்னையல்ல. வாழ்க்கைதான் என்னுடைய பிரச்னை. வாழ்க்கையில் இன்பத்தை பெருக்க வேண்டும். வேதனையை குறைக்க வேண்டும். இதுதான் என் இறுதி லட்சியம். ஒரு தெளிவான சமூக குறிக்கோளுள்ள எழுத்தாளன் நான். இந்த சமூக உறவுதான் என்னை எழுத வைக்கிறது." - இதுதான் அண்ணா!
அண்ணாவின் எழுத்தின் மீது மட்டுமல்ல திராவிட இயக்க அரசியல் தளத்திலிருக்கும் அனைவரின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு இவர்களின் எழுத்துகள் வெறும் பரப்புரை தொனியில் இருக்கிறது. அதில் இலக்கியத்தொனி இல்லை என்பதே!
இதனை ஒரு எளிய உதாரணம் கொண்டு அணுகலாம். சமீபத்தில் கோவா திரைப்பட விழாவில் பராசக்தி திரைப்படம் திரையிடப்படாமல் தடைசெய்யப்பட்டது. கருணாநிதியின் எழுத்துகள் அன்று ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை நீடிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவை இல்லை. இந்தத் திரைப்படம் ஒரு பரப்புரை பாணியில் அமைந்ததுதான். அன்றைய காலக்கட்டத்தில் அதுதான் தேவைப்பட்டது. மூடநம்பிக்கையிலிருந்த மக்களுக்கு எழுத்தின் மூலம் பகுத்தறிவை கற்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இதை அப்படியே அண்ணாவின் எழுத்துகளுடன் பொருத்திப் பார்க்கலாம்.
கருப்பண்ணசாமி யோசிக்கிறார் - என்றொரு கதையில் பக்தி என்று மக்கள் மூடநம்பிக்கையில் பிறழ்வதையும் மக்கள் கடவுளின் பெயரால் பிரிந்து சண்டையிடுவதையும் கண்டு கருப்பண்ணசாமியே கலங்குவதாக செல்லும் அந்தக் கதை.
"தேவி! பக்தர்களால் எனக்கு ஏற்பட்ட ஆபத்தும் சங்கடமும் உனக்கென்ன தெரியும்? வரவர இந்த 'வேலையிலே' எனக்கு வெறுப்பு வளர்ந்து கொண்டு வருகிறது. தாவரம் செய்த மோசத்தை அரை பலம் கற்பூரத்திலே மறைத்து விடலாம் என்று எண்ணுகிறான். அதற்கு நான் உடந்தையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். இவனுடைய பேராசைக்கு நான் துணை செய்ய வேண்டும் என எண்ணுகிறான். காரணம் கேட்டால் பெரிய படையலிட்டிருக்கிறேன் என்று கூறுகிறான்." இப்படி மறைமுகமாக அண்ணா மூடநம்பிக்கைக்கு அளித்த சவுக்கடிகள் ஏராளம்.
கொக்கரக்கோ- கதை வாசிக்கும்போது சில பத்திரிகைகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். பேரன் பெங்களூருவில் - என்றொரு கதை. அதில் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் புரோகிதர்களையும் பணத்திற்காக அவர்கள் செய்யும் சமரசங்களையும் மிக சாமர்த்தியமாக கூறியிருப்பார்.