தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்நடைகளுக்கு 28.75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தம் - முன்னாள் அமைச்சருக்கு கால்நடை துறை இயக்குனர் பதில் - கால்நடை துறை

ஒன்றிய அரசிடம் 28.75 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் பெறப்பட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரின் குற்றச்சாட்டுக்கு கால்நடை இயக்குனர் பதிலளித்துள்ளார்.

கால்நடைகளுக்கு 28.75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தல்
கால்நடைகளுக்கு 28.75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தல்

By

Published : Nov 21, 2021, 9:12 AM IST

சென்னை: பருவமழை தொடங்கியிருக்கும் சூழலில் கால்நடைகளுக்கு பெயரளவுக்கு கண்துடைப்பாக தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த அழுத்தத்தின் பயனாக 28.75 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் பெறப்பட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருவதாக கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் பதிலளித்துள்ளார்.

பயனாளிக்கு தலா ஐந்து ஆடுகள்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பத்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இலவச கறவைப்பசுக்கள் வழங்கும் திட்ட செயலாக்கத்தில் ஏற்பட்டுள்ள பலவகை இடர்பாடுகளை சரிசெய்யும் பொருட்டு இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தகுதியான பயனாளிகளுக்கு கால்நடைகள் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம், பயனாளிக்கு தலா ஐந்து ஆடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்ற ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் செவ்வனே மாற்றி அமைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

சேலம் மாவட்டத்தில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான உயர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் செயல்பாடுகளை விவசாயிகள், ஆராய்ச்சி மாணவர்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு பலனளிக்கும் வகையில் வரையறுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது திட்ட செயலாக்கப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் விரைவாக நடைபெற்று வருகின்றன.

காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை

விவசாயிகளுக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கால் மற்றும் வாய் கோமாரி நோய்க்கான தடுப்பூசி மருந்து, ஒன்றிய அரசின் மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை, கால்நடைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி மருந்தானது கடந்த பிப்ரவரி 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் வழங்கப்படவில்லை. தற்போது தேவைப்படும் 95 லட்சம் டோஸ்கள் தடுப்பு மருந்து ஒன்றிய அரசால் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த அழுத்தத்தின் பயனாக 28.75 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் பெறப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணியானது ஈரோடு, தஞ்சாவூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய மீதமுள்ள தடுப்பூசி மருந்துகள் ஒன்றிய அரசிடம் இருந்து விரைந்து பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தொடர்ந்து கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகள், நீதிமன்ற வழக்கின் காரணமாக நிரப்பப்படாமல் உள்ளது.

இதனால் களப்பணிகளை மிகுந்த சிரமத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், முதலமைச்சரின் உத்தரவினை பெற்று காலிப்பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் துறையிலுள்ள அனைத்து காலிப்பணிடங்களும் நிரப்பப்படும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மஞ்சள் தமிழர் தோனி: 'தல'யைப் புகழ்ந்த 'தளபதி'

ABOUT THE AUTHOR

...view details