சென்னை:அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் இன்று (பிப்.22) சங்கங்களின் ஊழியர்கள் மறுபடியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என கடந்த சில நாள்களுக்கு முன்னர், சங்கத்தின் ஊழியர்கள் ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர். மேலும், இவர்களது கோரிக்கைகள் நிறைவேறாததால், இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தை நடத்த தொடங்கியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110ஆவது விதியின் கீழ் அறிவித்தபடி, ‘அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கப்படுவார்கள், பணியாளர்களுக்கு 21 ஆயிரம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும்’ என்று அறிவித்த நிலையில், இந்த அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை என சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டினார்.