சென்னை: ஆந்திரப் பிரதேச மாநில அரசானது அரசுக்கு சொந்தமான நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங்குவதில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, வருவாய் பதிவுகள் மற்றும் பத்திரங்கள் துறையின் அமைச்சர் தலைமையிலான ஒரு குழுவினை அமைத்துள்ளது.
இந்த குழு உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், நில நிர்வாக ஆணையர் சீ.நாகராஜன், மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் நேற்று (ஜனவரி 23) ஆய்வு நடத்தினர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் அரசு புறம்போக்கு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு நில ஒப்படை செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் குறித்தும், இணையவழியில் நில ஒப்படை ஆவணங்களை பதிவு செய்வது குறித்தும் வருவாய்த் துறை செயலாளர் மற்றும் நில நிர்வாக ஆணையரால் ஆந்திரப் பிரதேச குழுவினருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ஆந்திர குழுவினரால் அரசு நிலங்களை ஒப்படை செய்வது தொடர்பாகவும், நிலச் சீர்திருத்த மற்றும் நில உச்சவரம்பு சட்டங்கள் தொடர்பாகவும் எழுப்பப்பட்ட பல்வேறு சந்தேகங்கள் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டில் நில ஆவணங்கள் பராமரிப்பு குறித்தும், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் திட்டங்கள் குறித்தும், நில ஒப்படை நடைமுறைகளை கணினிமயமாக்குதல் குறித்தும் ஆந்திரப்பிரதேச குழுவினர் தமிழ்நாட்டு அரசுக்கு பாராட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஊதிய மறு சீரமைப்பு தொடர்பாக அரசு அளவில் குழு அமைப்பு