திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகரில் ஆந்திர வங்கி கிளை இயங்கி வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவில் வங்கிக் கதவின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். வங்கியின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமரா உள்ளே இருந்த எச்சரிக்கை ஒலிபெருக்கி ஆகியவற்றை செயலிழக்கச் செய்து கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர்.
ஆனால் வங்கி லாக்கரின் உலோகம் பலமாக இருந்ததால் உடைக்க முடியாமல் கொள்ளையர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர். இதை தொடர்ந்து இன்று காலை வங்கிங்கு வந்து பார்த்த அலுவலர்கள் கொள்ளை முயற்சி நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.