இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். சாதித்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடு முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்ற நிலையில், அவர்களில் 7.71 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 56.44 விழுக்காட்டினர் தேர்ச்சி ஆகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசிய சராசரியை விட அதிக அளவாக 57.44 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை விட இது 9 விழுக்காடு அதிகம். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் கணிசமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண் எடுத்து 8ஆவது இடத்தில் உள்ளார். நீட் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டு மாணவர் ஒருவர் இத்தகைய சாதனையை படைப்பது இதுவே முதல்முறை. அதேபோல், தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகனும், அரசுப் பள்ளி மாணவருமான ஜீவித் குமார் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.