புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், அம்மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதேபோல் தமிழ்நாட்டில் திமுக அரசு, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும். அந்த வகையில் இத்திட்டம் மகளிர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.