எட்டு வழி சாலைத்திட்டம் தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும். அது தமிழக அரசின் கடமை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். எட்டு வழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது.
இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய ஐந்து மாவட்ட மக்களை, விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். அந்த வழக்கில்தான் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு முழுமையானத் தடை விதிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கில் எனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று கோரி கேவியட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் எனது சார்பில் எனது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருக்கின்றனர்.
இத்தகைய சூழலில்தான் முதலமைச்சர் பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும்.