தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.
சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (மே 5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 23, 310 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் முறைப்படி சோதனை நடத்தி அடையாளம் கண்டறியப்பட்டவர்கள் தான். சோதனை செய்யப்படாமல் கரோனா தொற்றுடன் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் நடமாடிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்பது தான் ஒரு மருத்துவராக மதிப்பீடாகும். கரோனா அவ்வளவு வேகமாக பரவிவருகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 150-ஐக் கடந்து விட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் 13 பேர் நேற்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்.
'கரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்குதான் ஒரே வழி'- அன்புமணி ராமதாஸ் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு காரணம் மருத்துவமனையில் மருத்துவம் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தான்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, நோய் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையை குறைக்காமல் நிலைமையை முன்னேற்ற முடியாது. கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அறிவித்து, அதை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்துவது தான்.
முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கரோனா பரவல் சங்கிலியை அறுத்தெறிய முடியும். பின்னர் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதன்மூலம் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து ஆக்சிஜன் - ரெம்டெசிவிர் பற்றாக்குறையை போக்கி, உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வரலாம்.
அத்தகைய முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகளை போக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.