சென்னை:ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டை வேகம் வெளிப்படையாகத் தெரியும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்காதது வருத்தம் அளிக்கிறது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, 24 மணி நேரம் கூட நிறைவடையாத நிலையில், ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மீண்டும் மக்களை வேட்டையாடத் தயாராகி விட்டன. ஆன்லைனில் ரம்மி ஆடினால், ஒரு கோடி ரூபாயுடன், ஒரு கிலோ தங்கமும் பரிசு என்று ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் வலைவிரித்திருக்கின்றன. ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டை வேகம் வெளிப்படையாகத் தெரியும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு, இப்போது வரை தொடங்காதது வருத்தமும், கவலையும் அளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் முடிவுக்கு வந்த நிலையில், தமிழக அரசால் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லும். ஆனால், ஆன்லைன் ரம்மிக்கு இது பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.