சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவாகச் சந்தித்து, வன்னியருக்கும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யக்கோரி மனு அளித்தோம். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி முடிவெடுப்பதாகச் சொன்னார்.
அதிமுக ஆட்சியில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு, திமுக ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. பின் ரத்து செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்து வழங்குங்கள் என்று கூறியது.
இதுதொடர்பாக தரவுகளை ஆய்வு செய்வதற்கு அதிகபட்சமாக 5 நாள்கள் போதும். ஆனால், 9 மாதங்கள் ஆகியும் தரவுகள் ஆய்வு செய்வதற்கு வரவில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தமிழக அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வருவார்களா என்று சந்தேகம் எழுகிறது. இதனால் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அழுத்தம் கொடுத்து உள்ளோம்.
மேலும், தரவுகளை ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் தரவுகளைச் சேகரித்து தந்தால் தான் தமிழக அரசு சட்டம் இயற்ற முடியும். 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி பிரச்னை மட்டும் இல்லை, தமிழகத்தின் வளர்ச்சி பிரச்னையும் தான். மிகப்பெரிய சமூகமான வன்னியர் சமூகம் முன்னேறினால் தமிழகம் வளர்ச்சி அடையும்.
இந்த பிரச்னையை சாதி, மதம், இனப் பிரச்னையாக பார்க்கக் கூடாது என்றும் கடந்த 30 ஆண்டுகளாக 10,12ம் வகுப்புகளில் வட மாவட்டங்கள், பின்தங்கிய மாவட்டங்களாகவே இருக்கிறது. அதிகமான குடிசைப்பகுதி, அதிக மது விற்பனை, வட மாவட்டங்களில் தான் இருக்கிறது. இதனால் வட மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக காணப்படுகிறது.