இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப் படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்துள்ளது.
ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழையும் நிரந்தரமாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு ஆகும்.
. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகளுக்குள் நிச்சயமாக வேலை கிடைத்து விடும் என்று நம்பப்பட்டது. அதைப்போலவே முதலில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.
ஆனால், அதன்பின்னர் போதிய எண்ணிக்கையில் காலியிடங்கள் இல்லாத நிலையில் 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதனால் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வேலை கிடைக்கவில்லை.
அவர்களின் தகுதிச் சான்றிதழ் காலம் நடப்பாண்டில் முடிவடையவிருக்கும் நிலையில், ஆசிரியர் கல்விக்குழு எடுத்துள்ள இந்த முடிவு ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது.
ஏற்கனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதிச்சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை வாழ்நாள் முழுவதற்கு நீட்டிப்பதில் தவறு இல்லை. அதற்கான அறிவிப்பு விரைந்து வெளியிடப்பட வேண்டும்.
அதே நேரத்தில் ஆசிரியர் தகுதிச்சான்றிதழ் காலம் நீட்டிக்கப்படுவது மட்டுமே போதுமானதல்ல. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆசிரியர் பணிக்காக பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் அனைவரும் பயனடையும் வகையில் ஆசிரியர் நியமனங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும்.
ஆசிரியர், மாணவர் விகிதம் மாநில அளவில் கணக்கிடப் படுவதால் தான் ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் மாணவர் விகிதத்தை பள்ளி அளவில் கணக்கிடுவது தான் சரியானதாக இருக்கும்.
எனவே, பள்ளி அளவில் ஆசிரியர் மாணவர் விகிதத்தை கணக்கிட்டு, அதனடிப்படையில் புதிய பணியிடங்களை உருவாக்கி, அவற்றில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.