தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இஸ்லாமியக் கைதிகளை விடுதலை விவகாரத்தில் முன்னேற்றம் இல்லை - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Dr Anbumani Ramadoss: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூத்த அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து இஸ்லாமியக் கைதிகள் உள்ளிட்ட நீண்ட காலமாக சிறைகளில் வாடும் 264 பேரின் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss said group of ministers led by the Chief Minister should urge the Governor to release the Islamic prisoners
அன்புமணி ராமதாஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 3:49 PM IST

சென்னை: நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 264 கைதிகளில், ஏற்கனவே ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்ட 49 பேர் தவிர மீதமுள்ளவர்களையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தண்டனை முடிந்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க போர்க்கால நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது. அனைத்துக் கட்சிகளின் சார்பில் அழுத்தம் கொடுத்தும் இந்த சிக்கலில் ஆக்கப்பூர்வமான விடையோ, உத்தரவாதமோ அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக ஆளுநர்களாக வருபவர்கள், தண்டனைக் காலத்தை முடித்த கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்யும் விஷயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து, கடந்த 09.09.2018ஆம் நாள் அமைச்சரவைத் தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்த போதிலும் கூட, அப்போதிருந்த ஆளுநர் அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த அநீதி நடந்தது.

அதன்பிறகு பேரறிவாளனே உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி 1346 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார். இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 49 கைதிகள் விடுதலை விவகாரத்திலும், அரசுத் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படாவிட்டால், அவர்களின் விடுதலைக்கான பரிந்துரை ஆளுநர் மாளிகையின் அலமாரிகளில் உறங்கிக் கொண்டே தான் இருக்கும்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியக் கைதிகளின் விடுதலை கானல் நீராகவே இருக்கும். அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் அவர்களுக்கு நீதி வழங்க முடியும்.

எனவே, உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, நீதியரசர் ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 264 கைதிகளில், ஏற்கனவே ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்ட 49 பேர் தவிர மீதமுள்ளவர்களையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூத்த அமைச்சர்கள் குழுவினர் ஆளுநரை நேரில் சந்தித்து இஸ்லாமியக் கைதிகள் உள்ளிட்ட நீண்ட காலமாக சிறைகளில் வாடும் 264 பேரின் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும். ஆளுநர் தரப்பில் தாமதம் செய்யப்பட்டால், அவர்கள் அனைவரையும் நிபந்தனை இல்லாத சிறை விடுப்பில் அவர்களின் இல்லங்களுக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேளாண் துறை சார்ந்த சாதனை மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது - முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details