தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Vellore girl suicide:'வேலூர் சிறுமியின் ஆன்மா சாந்தியடைய எல்லா மது கடைகளையும் மூடுக' - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் - vellore news in tamil

வேலூரில் தந்தையின் குடிப்பழக்கதால் மகள் தற்கொலை செய்த கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்றும் மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 4, 2023, 9:27 PM IST

Updated : Jun 4, 2023, 10:17 PM IST

Vellore girl suicide: சென்னை:வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு. இவரின் 16 வயது மகள் ரஞ்சனா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பொதுத் தேர்வில் 410 மதிப்பெண்களை எடுத்து சமீபத்தில் தேர்ச்சி பெற்றார்.

இதனிடையே, மது பழக்கத்திற்கு அடிமையான இவரது தந்தை பிரபு, தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவ்வாறு தனது தந்தை அனுதினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தனது தாயுடன் தகராறு செய்து வருவதைப் பார்த்து மனமுடைந்த பள்ளி மாணவி இன்று (ஜூன் 4) தற்கொலையால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாது, ஒரு வீட்டில் மது பழக்கத்திற்கு ஒருவர் அடிமையாகியதன் விளைவாக ஏற்படும் இன்னல்களையும் அதனால், ஏற்படும் பல மோசமான விளைவுகளையும் இந்த சம்பவம் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் மறையாத நிலையில், இந்த 16 வயது பள்ளி சிறுமியின் தற்கொலையானது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த நிலையில், வேலூர் சிறுமி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று டிவிட்டரில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ரஞ்சனா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), கூலித்தொழிலாளியான தமது தந்தையின் குடிப்பழக்கத்தால் தமது குடும்பத்தின் நிம்மதி குலைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ள அச்சிறுமி, ’’என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பது தான். எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ, அப்போது தான் எனது ஆன்மா அமைதியடையும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ரஞ்சனாவின் கடிதம் எனது இதயத்தை வாட்டுகிறது.

ரஞ்சனாவின் வேண்டுதல் அவருடையது மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பதின்வயது குழந்தைகளின் மனநிலை இது தான். தமிழ்நாட்டிலுள்ள 90 விழுக்காடு குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளன. மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் அமைதி இல்லை. வறுமை.. சண்டை.. பசி.. பட்டினி.. நோய், மன அழுத்தம், நிம்மதியின்மை ஆகியவை தான் அந்தக் குடும்பங்களை வாட்டுகின்றன. அதன் விளைவு தான் ரஞ்சனா தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற மாணவர், தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாமல், ‘அப்பா.. நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு எந்தக் காரியமும் செய்யக் கூடாது. இதன் பிறகாவது குடிக்காமல் இருந்தால்தான் எனது ஆன்மா சாந்தியடையும். நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’’ என்று நெல்லை வண்ணாரப்பேட்டையில் தற்கொலை செய்து கொண்டார்.

தினேஷின் தற்கொலையால் எந்த பயனும் ஏற்படவில்லை. ரஞ்சனாவின் தற்கொலையாவது மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் தமிழில் பேசும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாணவி, சமூகநீதி பற்றி பேசியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூகநீதியைக் காக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதே உணர்வுடன் விஷ்ணுப்பிரியாவின் கடிதத்தையும் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் விருப்பமும் மதுவிலக்கு தான். அதை நிறைவேற்ற உதவும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுங்கள்.. மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள்.. வேலூர் சிறுமி ரஞ்சனாவின் ஆன்மா அமைதியடைய உதவுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்' என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:அப்பாவின் மதுப்பழக்கத்தால் மகள் தற்கொலை.. உருக்கமான கடிதம்!

Last Updated : Jun 4, 2023, 10:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details