சென்னை பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவிரையாளர்களுக்கான ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது எனவும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் போதுமான நிரந்தர விரிவுரையாளர்கள் இல்லாததால், அவர்களுக்கு பதில் தற்காலிக விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதித்துள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பாமல் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் அமர்த்தியுள்ளனர். அதேபோல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் தொகுப்பூதியம் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இது குறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி மாத ஊதியம், பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கவுரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு முழுமையாக மனநிறைவு அளிக்காது என்றாலும் கூட, வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.மேலும், இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10 ஆயிரம் என்ற மாத ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த கல்வியாண்டில் தான் ரூ.20 ஆயிரம் என்ற நிலையை எட்டியது.