சென்னை: இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விபரங்களையும் வெளியிட்டு இருக்கிறது, பிகார் மாநில அரசு. இதன் மூலம் சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை பிகார் அரசு வென்றெடுத்து இருக்கிறது. இதற்கு காரணமான பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்-க்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூக நீதியைக் காக்கும் விஷயத்தில் தமிழ்நாட்டிற்கும், பிகாருக்கும் இடையே எப்போதும் மறைமுகமான போட்டி நடந்து கொண்டேதான் இருக்கிறது. மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை 1951ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் மூலம் சாத்தியமாக்கியது, தமிழ்நாடு.
தேசிய அளவில் ஓபிசி இடஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கான மண்டல ஆணையம் அமைக்கப்படுவதை 1978ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் பிகார் மாநிலத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி சாத்தியமாக்கியது பிகார் மாநிலம்தான்.
சமூகநீதியைக் காப்பதில் தமிழகம் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், சமூகநீதியைக் காப்பதில் பிகார் மாநிலம் மீண்டும் சாதித்து இருக்கிறது. பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் அம்மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 சதவீதம், பட்டியலினத்தவர் 19.7 சதவீதம், பழங்குடியினர் 1.70 சதவீதம், இடஒதுக்கீடு அல்லாத வகுப்பினர் 15.50 சதவீதமாக இருப்பதும், சாதிகளைப் பொறுத்தவரை யாதவர் சமுதாயம் 14.26 சதவீத மக்கள்தொகையுடன் தனிப்பெரும் சாதியாக இருப்பதும் தெரிய வந்து இருக்கிறது.
இது குறித்து விரைவில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க இருக்கும் பிகார் மாநில அரசு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பது குறித்தும் தீர்மானித்து செயல்படுத்த உள்ளது. பிகார் அரசின் இந்த முயற்சியும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிகாருக்கு முன்பே கர்நாடகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மாறாக, பிகார் அரசுதான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளையும் வெளியிட்டு இருக்கிறது. அதன் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பல்வேறு மாயைகள் நொறுக்கப்பட்டு இருக்கின்றன.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டு வந்தது. மத்திய அரசும் அதே நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், மாநில அரசுக்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உண்டு என்பதை பிகார் உயர் நீதிமன்றம் கூறி இருக்கிறது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
அதன் மூலம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும். இதை பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உண்மையில் கர்நாடகமும், பிகாரும் நடத்துவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான தேவையும், கோரிக்கைகளும் தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கின்றன.
44 ஆண்டுகளுக்கு முன்பு 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டபோது, அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ற வகையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அப்போதும், அதற்கு பிறகும் வந்த தமிழக அரசுகள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.