சென்னை: 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை தொடர்பாக அதிமுக, பாமக தலைவர்கள் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இதில், வரும் தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
இந்த சந்திப்புக்கு பின் அன்புமணி ராமதாஸ் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு பிரத்யேகப் பேட்டி ஒன்றை அளித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்பு வன்னியர்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு - அன்புமணி நம்பிக்கை அப்போது, கடந்த 2001 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாமக தற்போது 23 இடங்களுக்கு ஒப்புக்கொண்டது ஏன் என்ற கேள்விக்கு, "எங்களது பிரதான கோரிக்கையான கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நிறைவேற்ற அதிமுக அரசு சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளதால், வேண்டுமென்றே நாங்கள் போட்டியிடும் இடங்களைக் குறைத்துக் கொண்டோம்.
இதனால் எங்கள் பலம் குறைந்து விட்டது என்று பொருள் அல்ல. நாங்கள் மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சி. அதிமுகவின் வெற்றிக்காக எங்களது இடங்களைக் குறைப்பதில் ஆட்சேபனை இல்லை.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே அதிக இட ஒதுக்கீடு கிடைக்கிறது என்றும் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் வன்னியர்களுக்கு பின்னடைவு ஏற்படும் எனவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறும் கருத்து குறித்துப் பேசிய அவர்,"10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டால் வன்னியர்கள் இடம் குறைந்துவிடும் எனக் கூறுவதில்லை உண்மையில்லை.
இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? தற்போது, வன்னியர்களுக்கு 3 முதல் 4 விழுக்காடு இடங்களே கிடைக்கிறது. 1987 இல் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது, எங்களது முதற்கட்ட கோரிக்கை நிறைவேறியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பின், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், அதன் பின்பு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும், 15 விழுக்காடு வரை இடஒதுக்கீடு கிடைக்கும்
சுமார் 20 ஆண்டுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது பாமக. இதற்கு முன் 2001 தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’மோடியின் ரிமோட் கண்ட்ரோல் அதிமுக அரசின் பேட்டரியை இத்தேர்தலில் எடுத்திடுவோம்’