இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சேலம் மாவட்டம், கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட மீனவர்கள் 3 பேர் தமிழக - கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். கடந்த 14-ஆம் தேதி இரவு அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதில் ராஜா என்ற மீனவர் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் உயிரிழந்தார். மற்ற இருவரும் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை.
கர்நாடக எல்லையையொட்டிய பகுதிகளில் வாழும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இரு மாநில எல்லைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மீன்பிடிப்பது வழக்கம். இது வாழ்வாதாரம் சார்ந்த ஒன்று தானே தவிர, இதில் விதிமீறலோ, குற்றமோ எதுவும் இல்லை. கர்நாடகா எல்லை, இந்தியாவின் ஒரு பகுதி தானே தவிர, இலங்கையின் எல்லையோ, பாகிஸ்தானின் எல்லையோ அல்ல.
ஒருவேளை இரு மாநில எல்லையில் உள்ள நீர் நிலைகளில் மீன் பிடிப்பது தவறு என்றால் விரட்டியடித்திருக்கலாம் அல்லது சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இரக்கமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர் மீது துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்திருப்பது பெருங்குற்றம். இதை மன்னிக்கவே முடியாது.
இரு மாநில எல்லையில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த 2018-ஆம் ஆண்டில் அதே அடிப்பாலாறு பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர் பழனி என்பவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர்.