சென்னை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இது இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும்.
இந்தியா சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு. அவற்றைக் களைய வேண்டுமானால் சமூக நிலையின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சமூக நிலைக்கு பதிலாக பொருளாதார நிலையை சமூகநீதிக்கான அளவீடாகக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது.