சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை மற்றும் தொழில் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள், ரயில்கள் போன்றவற்றில் முன்பதிவு செய்து வருகின்றனர். அரசுப் பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்தில் முன்பதிவு செய்வார்கள்.
ஆனால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில், ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்குவதற்கு காரணம் என்ன என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது X பக்கத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தீபாவளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்குச் செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு, தனியார் ஆம்னி பேருந்துகள் பயணக் கட்டணத்தை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தியுள்ளன.
சென்னையிலிருந்து நாளை மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.3,200, நெல்லைக்கான கட்டணம் ரூ.3,400, கோவைக்கான கட்டணம் ரூ.3,999 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதத் தொடக்கத்தில் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் போதும், ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையின் போதும் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையும் அதிரடி சோதனைகளை நடத்தி, ரூ.37 லட்சம் தண்டம் விதித்ததாக செய்தி வெளியிட்டது. ஆனால், உண்மை என்னவென்றால், மொத்தம் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அவற்றில் 2,092 பேருந்துகளுக்கு மட்டுமே இந்த தண்டத்தை விதித்துள்ளனர். அதுவும் கூட ஒரு பேருந்துக்கு சராசரியாக ரூ.1,768 மட்டுமே தண்டமாக வசூலிக்கப்பட்டுள்ளது.