சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களில் பள்ளிக் கல்வித்துறையைத் தேர்வு செய்த 673 இளநிலை உதவியாளர்களுக்கு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குருப் 4 பணியில் தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி துவக்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறையில் 2 பேருக்கு பணியாணையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். 50 ஆயிரம் நபர்களை அரசு வேலைக்காக எடுப்பதற்குத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அரசாங்கம் என்ற இயந்திரத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றால், காலிப் பணியிடங்களை சரியாக நிரப்ப வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் முதல்வன்" கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறுவதில் பணி ஆணை பெற்றுள்ள இளநிலை உதவியாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், பணி நியமனம் பெற்றவர்கள் தங்களது பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கோப்புகளை உடனுக்குடன் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், "வாணியம்பாடி அருகே குழியில் நிரம்பி இருந்த தண்ணீரில் விழுந்து மரணம் அடைந்த மாணவிகளின் மறைவிற்கு நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருவரும் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது உள்ளே விழுந்து இறந்துள்ளனர்.
மழைக் காலங்களில் பள்ளி வளாகங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை முறையாக பின்பற்றுமாறு கல்வி அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிற துறையைச் சேர்ந்த அலுவலர்களும், மாவட்ட ஆட்சியரும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது" என்று கூறினாரர்.