சென்னை : இளம் எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்தார்.
பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.25) நடைபெற்றது. இதில் நிறைவாக பதிலுரையாற்றிய அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவை,
- குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயத்திற்குள்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டு தோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும்.
- திராவிட மொழிகளிலே தொன்மை மிக்க மொழியான தமிழின் வரலாறு பண்பாட்டு மரபு மற்றும் தமிழ்ச் சமூகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த தமிழ்நூல்கள் (மாபெரும் தமிழ்க் கனவு ஆங்கிலத்திலும், பொன்னியின் செல்வன், வைக்கம் போராட்டம் ஆகிய நூல்கள் மலையாளத்திலும் , திருக்குறளுக்கான கலைஞர் உரை தெலுங்கிலும், தி.ஜானகிராமனின் சிறுகதைகள் கன்னடத்திலும்) மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் சம்மந்தப்பட்ட மாநில மொழிப் பதிப்பகங்களோடு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கூட்டு வெளியீடுகளாகக் கொண்டுவரப்படும். இதேபோல் , பிற திராவிட மொழிகளிலிருந்து சிறந்த நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும்.
- கிராமப்புறங்களைச் சேர்ந்த லட்ச கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகள் சிறந்த கல்விச் சேவையை ஆற்றி வருகின்றன. இப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு, கல்வித்தரம், பெற்றோருக்கான விழிப்புணர்வு என ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கென சிறந்த முறையில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிசைகள் வீடுகளுக்கே சென்று வழங்க மாணவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 7786 மாணவ- மாணவிகளுக்கு, ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படும்.
- சீர்காழியில் முனைவர் எஸ்.ஆர். அரங்கநாதன் நினைவு நூலகம் அமைக்கப்படும்.
இவ்வாறு 28 அறிவிப்புகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க :செப்டம்பரில் பள்ளிகள் திறப்பது உறுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி