சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு சுமார் 130 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முக்கியமாக, சென்னை எழும்பூரில் இருந்து, தென் மாவட்டங்களான, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில், கன்னியக்குமரி ஆகிய மாவட்டங்களுக்கு விழுப்புரம், திருச்சி வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேப்போல், கடலூர், மயிலாடுதுறை வழியாக தஞ்சைக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்கள் வழியாக கேரளாவிற்கும் ரயில்கள் இயக்கபடுகின்றன. அதில் முக்கிய ரயிலாக இருப்பது சென்னை - கொல்லம் இடையே திருவந்தபுரம் வழியாக இயக்கப்படும் அனந்தபுரி (16823 - 16824) விரைவு ரயில் உள்ளது.
இந்த ரயில் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படவுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து இதன் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரிலிருந்து 20 நிமிடம் முன்னதாக அதாவது, இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு கொல்லத்துக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்றடையும்.