ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்துவைத்ததாகக் குற்றஞ்சாட்டி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்துவரும் லாக்அப் மரணங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.
மேலும், இச்சம்பவத்திற்கு எதிராக டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் #JusticeForJeyarajAndFenix எனும் ஹாஷ்டேக்கில் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆன்ந்த் மஹேந்திரா இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், ”இது என்னுடைய இந்தியாவே இல்லை. இந்தியாவில் இதுபோன்ற செயல்கள் நடப்பது வேதனையளிக்கிறது. இந்த விவகாரத்தை வெளிப்படையாகவும், நேர்மையுடனும் விசாரித்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’ஆன்லைனில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ தயாராகவில்லை’