தமிழ்நாடு

tamil nadu

ஓடும் ரயிலில் சென்ற முதியவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு.. 4 மணிநேரம் மருத்துவர்கள் வரவில்லை என புகார்!

By

Published : Jul 7, 2023, 9:43 PM IST

ரயிலில் பயணித்த முதியவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறால் உயிரிழந்தார். சுமார் 4 மணி நேரமாக மருத்துவர்கள் வராததால் முதியவர் உயிரிழந்ததாக உறவினர்கள் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

ரயிலில் சென்ற முதியவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சென்னை: தண்டையார்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முதியவர் முருகேசன் (70). இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்குச் சென்றார். பின்னர், நேற்று இரவு (ஜூலை 06) முத்து நகர் விரைவு ரயில் மூலமாக குடும்பத்துடன் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது விருதாச்சலம் ரயில் நிலையத்தை கடந்த போது திடீரென முதியவர் முருகேசனுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் இது குறித்து தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்று விசாரித்த டிக்கெட் பரிசோதகர், விழுப்புரம் ரயில் நிலையத்தை அடைந்த உடன் அங்கு மருத்துவக் குழுவினர் தயாராக இருப்பதாகவும், அவர்கள் வந்து சரிசெய்துவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் விழுப்புரம் ரயில் நிலையத்தை அடைந்த போது மருத்துவக் குழுவினர் ஒருவரும் இல்லை என தெரியவந்தது.

இதனால் அதிருப்தியடைந்த குடும்பத்தினர், பின்னர் ஒவ்வொரு ரயில் நிலையத்தை கடக்கும் போதும் மருத்துவக் குழுவினர் யாரேனும் வருவார்கள் என எதிர்ப்பார்த்து குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால், ஒருவரும் வரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மருத்துவக் குழுவினர் வந்து, மயக்கமடைந்த முதியவரான முருகேசனை பரிசோதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதியவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முதியவரின் உறவினர்கள், ரயில்வே நிர்வாகம் அலட்சியத்தின் காரணமாகவே முதியவர் இறந்துவிட்டதாக கூறி எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதியவரின் உறவினர், "ரயில்வே நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால் முதியவர் உயிரிழந்து இருக்கிறார். குறிப்பாக விருத்தாச்சலம் முதல் தாம்பரம் வரை சுமார் 4 மணி நேரமாக மருத்துவக் குழுவினர் வராததால் தான் முதியவரின் உயிர் பிரிந்திருக்கிறது” என அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, அவ்வளவு பெரிய ரயில்வே நிர்வாகத்தில் ரயிலில் ஒரு மருத்துவரை கூட நியமிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். இதற்கு காரணமான ரயில்வே அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார். இதற்கிடையே, சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே காவல் துறையினர், முதியவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; ரயில் கண்ணாடி உடைப்பு - ரயில்வே காவல் துறை வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details