சென்னை:வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கக் கட்டிகளை சுங்கச் சோதனை இல்லாமல் வெளியே கடத்திச் செல்ல உதவியதாக, விமான நிலைய ஒப்பந்த ஊழியர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து, அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (அக். 30) வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிடும் போது சென்னை விமான நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் அருள் பிரபாகர் (வயது 32) என்பவர் அவசர அவசரமாக விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரித்த போது, அருள் பிரபாகர் தனக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பெர்மிஷன் போட்டுவிட்டு, வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், அவர் பதற்றத்துடன் காணப்பட்டதால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து ஒப்பந்த ஊழியர் அருள் பிரபாகரை, வெளியில் விடாமல் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவரை தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் சுமார் ஒரு 2 கிலோ மதிப்பிலான தங்க கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி, இந்த தங்க கட்டிகள் அடங்கிய பார்சலை கடத்தி வந்ததாக அருள் பிராபகர் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர், அருள் பிரபாகர் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வரும் வழியில் நின்று, இலங்கை கடத்தல் ஆசாமி கொண்டு வந்து இருந்த பார்சலை வாங்கி தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.