சென்னை: பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று (ஜூலை 24) விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் ஜி20 நாடுகள் மாநாடு மற்றும் COP 28 ஐநா காலநிலை மாநாட்டில் உறுதியான காலநிலை நடவடிக்கை கோரி இந்த விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.
புகை படிம எரிபொருளில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் எந்த ஒரு அமைப்போ அல்லது கட்சியோ இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவில்லை என்பது வருத்தமாக உள்ளதாக விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், “நமக்கு உள்ள பிரச்சினைகள் சிறிய சிறிய பிரச்சினைகள்தான், ஆனால் காலநிலை பிரச்சினை மிக பெரிய பிரச்சனை, அது தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும், அரசாங்கமும் அமைதியாக உள்ளது. உங்களுக்கு கோபம் வரவில்லையா, பயம் வரவில்லையா”என மக்களிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து “மற்ற நாடுகளில் நடப்பது போன்று இயற்கை சீற்றம் இங்கும் வர உள்ளது. ஜூலை மாதம் உலக வரலாற்றில் அதிக வெப்பமான மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதாவது பயம் வரவில்லையா? என்ற அவர், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காட்டுத்தீ பரவியுள்ளது, இதனால் அந்த நாடுகள் தங்கள் விமாணங்களை ஐரோப்பிய நாட்டில் நிறுத்தி வைத்துள்ளது. அத்தனை தூரம் தாக்கம் உள்ளது” என்றார்.
“கடுமையான வறட்சி, பெரும் மழை, சூப்பர் புயல் ஆகிய இயற்க்கை சீற்றங்கள் வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் முன்னேறி கொண்டிருக்கும் இந்திய நாடு பெரிதும் பாதிக்கப்படும். இயந்திர நாடுகளான மேற்கத்திய நாடுகள் புகை படிம எரிபொருளை எரித்து அவர்கள் உயர்ந்துவிட்டனர். மேலும் உலக வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்த நிலையில்தான் இத்தனை பாதிப்பு. இது பற்றி இந்திய அரசுக்கு எந்த கவலையும் இல்லை” என குற்றம் சாட்டினார்.
சென்னை மற்றும் டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் நாடுகளின் தலைவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றதாக அவர் கூறினார்.