சென்னை: எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அஃபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (டிசம்பர் 20) வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண் பயணி ஒருவர் சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்திருந்தார். அவரது உடமைகளை சுங்க அதிகாரிகள் பயன்பாட்டுக்காக உள்ள ஸ்னீப்பர் என்ற பெயருடைய பெண் மோப்ப நாய் மூலம் பரிசோதித்தனர். மோப்ப நாய் அந்தப் பெண் பயணியின் உடமையை மோப்பம் பிடித்து குறைத்துள்ளது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பெண் பயணியின் உடமையை திறந்து பார்த்து சோதித்தனர். அதில் மெத்தோ குயிலோன் என்ற போதைப்பொருள் ஒரு கிலோ 542 கிராம் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் 644 கிராம் இருந்தன. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அந்த போதைப் பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.5. 35 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை அடுத்து உகாண்டா நாட்டு பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு...