சென்னை:தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 4.30 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால், கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டுமில்லாமல் தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்ற பால் பொருள்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும், இதுவரை ஆவின் நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதலில் தீவிரமாக ஈடுபடவுள்ளது. அமுல் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பால் முகவர்கள் மூலம் தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் ஈடுபட்டது. இந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது மீண்டும் பால் கொள்முதலில் தீவிரமாக இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பால் கொள்முதல் நிலையங்களை அமைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட மாவட்டங்களில் அந்நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமுலின் தயாரிப்புகளான நெய், மில்க் ஷேக் மற்றும் ஐஸ்கிரீம்களுக்கு மாநிலம் முழுவதும் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த சூழலில், விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனம் முகவர்களை நியமிக்கலாம் என தெரிகிறது. வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல அமுல் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.