சென்னை:தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில், பாமக மற்றும் திமுகவோடு கூட்டணிக் கட்சிகளாக இருக்கக்கூடிய இதரக் கட்சிகளும் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து வந்த நிலையில் நேற்று (நவ.27) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசும் பொழுது தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக முதல்வரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "சாதி வாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகப் பிரதமருக்குத் தமிழக முதல்வர் எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்காத நிலையில் தன்னை நோக்கி வரும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசின் பக்கம் முதலமைச்சர் திருப்பி விடுகிறாரோ என்ற எண்ணம் தோன்றுவதாகவும், பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசினுடைய உதவியின்றி மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்கலாம் என்று நிரூபித்திருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது தமிழகத்தில் சமூக நீதி நிலைநாட்டும் சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழக அரசு நடத்தத் தயங்குவது ஏன்?
இட ஒதுக்கீடு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மற்றும் வாழ்வாதார விவரங்களைத் திரட்டி அவர்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.