சென்னை விமான நிலையத்தில் அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அத்திவரதர் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் ஆய்வாளரிடம் மோசமாக நடந்திருக்கக் கூடாது. அத்திவரதரை அமைச்சர்கள் வரிசையில் சென்று தரிசித்து இருந்தால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஒரு தேநீர் குடித்துக்கொண்டு, லாவகமாக காவல் ஆய்வாளருடன் ஆட்சியர் உரையாடியிருக்கலாம்.
காவல் ஆய்வாளரை, ஆட்சியர் மிரட்டியது பணியிலிருக்கும் காவலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு காவல் அலுவலர் தவறு செய்யும்பட்சத்தில், அவரை நேரில் அழைத்துப் பேசி வருத்தம் தெரிவித்திருந்தால், அது காவலர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். வீரப்பனைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், உடல்நலம் பாதித்தபோதும் ஏழு மணி நேரம், காவல் துறையினருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கெடுத்து விருதுகளை வழங்கியவர் ஜெயலலிதா.
பிரதமர் மோடி உத்தர்காண்ட் காட்டில் சென்று பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. நீலகிரியும் காடுதான். காஷ்மீர் போல் சிதைந்துள்ளது. நீலகிரிக்கு வந்து மக்களைச் சந்தித்து நிவாரண பணிகளைச் செய்ய வேண்டும். அதுபோல் கேரளா, வட கர்நாடக போன்ற இடங்களைப் பிரதமர் வந்து பார்த்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும். ‘காட்டிற்குச் சென்ற பிரதமர் நீலகிரிக்கு வருவாரா?’ என்பதை பாஜகதான் சொல்ல வேண்டும்.
கட்சியைப் பதிவு செய்து நிரந்தரமாகச் சின்னம் கிடைக்க வேண்டும். அதற்கு முன் இடைத்தேர்தல்களில் போட்டியிட்டால், வேறு சின்னங்களில்தான் தேர்தலை சந்திக்க நேரிடும் என்று பொதுச்செயலாளர் சொல்லியுள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிடாமல் புறக்கணித்தது வருத்தமாகத்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்
அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மேலும் ரஜினி குறித்துப் பேசும்போது, “அமித்ஷாவைப் பாராட்டிதான் ஆக வேண்டும். பாராட்டுவது ரஜினியின் குணம். அர்ஜுனன், கிருஷ்ணனாக மோடியும், அமித்ஷாவும் இருந்துவிட்டுப் போகட்டும். ரஜினி எப்போது அரசியலுக்கு வரப்போகிறார். இவரை எப்போது மக்கள் பாராட்டப் போகிறார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.